கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல குவிந்த மக்கள் கூட்டத்தை காணலாம்.
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள் - கடந்த 3 நாட்களில் 10 லட்சம் பேர் பயணம்
- முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
- கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.
சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் இருந்து நேற்று முன்தினம் முதல் மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் ரெயில் மூலம் பலர் பயணித்த நிலையில், நேற்றும் ஏராளமானோர் ரெயில்களில் பயணித்ததை பார்க்க முடிந்தது. சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் வழக்கமான கூட்டத்தைவிட அதிக அளவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், சில ரெயில்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அங்கும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது.
முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சொகுசு பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. முன்பதிவில்லாத பெட்டியில் மூச்சுவிடக்கூட இடம் இல்லாத சூழல் இருந்தது. நெரிசலில் நின்றுக்கொண்டே தொலைதூரப்பயணத்தை பலர் மேற்கொண்டனர். அதுவும் கடைசிநேர பயணத்தை திட்டமிட்டு வந்தவர்கள், ரெயில்பெட்டியில் தொங்கியபடியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தன.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மூட்டை முடிச்சுடுகளுடன் வடமாநிலத்தவர்கள் ரெயிலில் ஏறி பயணித்தனர். அதிலும் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் அதிகம் பயணித்துள்ளனர்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் இதுவரை சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுதவிர, சென்னை எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வரை பயணித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முந்தையநாளை கணக்கிட்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி, நேற்றுமுன்தினம் முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் மட்டும் சென்னையிலிருந்து புறப்பட்ட 2,853 பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் பயணித்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று 4,257 பஸ்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் பஸ்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என சொல்லப்படுகிறது.
பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் அந்த குறிப்பிட்ட பஸ்களில் ஏறிச்சென்றனர். முன்பதிவில்லாத சிறப்பு பஸ்களில் ஓடிப்போய் இடம்பிடித்தும், முண்டியடித்து ஏறியும் மக்கள் பயணித்தனர்.
இதுதவிர ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து மக்கள் பயணம் மேற்கொண்டனர். கடந்த 2 நாட்களில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 210 பேர் பயணித்ததாகவும், இன்றும், நாளையும் சேர்த்து சுமார் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்க உள்ளதாகவும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ.அன்பழகன் தெரிவித்தார்.
சிலர் சொந்த கார்களிலும் பயணித்தனர். அதன்படி, அனைவரும் நேற்று காலையிலிருந்து தங்களுடைய காரில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் ஜி.எஸ்.டி. சாலை, போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது.
இப்படியாக கார்கள் மூலம் நேற்று 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இன்றும், நாளையும் சேர்த்து எப்படியும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.
மொத்தத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து நேற்றுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையெடுத்துள்ளனர். இன்றும், நாளையும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னை ஜி.எஸ்.டி. சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.