தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் - தலைவர்கள் வாழ்த்து
- நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
- துன்பங்கள் கரைந்து ஒளி மயமான எதிர்காலம் பிறக்கட்டும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்; தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து ஒளி மயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தூய வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் டாக்டர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன், தமிழ்நாடு மண்பாண்ட குலாலர் சங்கம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.