தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஸ் நிலையங்களை சீரமைக்க முடிவு
- அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.
- தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாம்பரம்:
தாம்பரம் பஸ்நிலைய பகுதி எப்போதும் போக்கு வரத்து நெரிசலாக காணப்படும். தாம்பரத்திற்கு என தனி பஸ் நிலையம் இல்லாததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் ரெயில் நிலையத்துக்கு எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி ஆங்காங்கு நிறுத்தப்படுவது வழக்கம்.
ஜி.எஸ்.டி.சாலை மூன்று தடங்களை கொண்டதாக உள்ளது. பயணிகளை இறக்குவதற்காக ஒரு தடத்தில் பஸ்கள் வரிசை கட்டி நிற்கும்போது மற்ற இருதடங்களில் பஸ்கள், வாகனங்கள் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. இதற்காக தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி செல்ல 110 மீட்டர் நீளத்திற்கு மேற் கூரையுடன் கூடிய(தடம்66) பஸ்நிலையமும், பல்லாவரம் கிண்டி வடபழனி வழியாக கோயம்பேடு செல்ல (தடம்70) 90 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு பஸ்நிலையமும் ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்நிலையங்களாலும் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த 2 பஸ்நிலையங்களிலும் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மண்டல தலைவர் காமராஜ் இந்திரன், தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இரண்டு பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது 2 பஸ்நிலையங்களையும் நவீன வசதியுடன் மறு சீர மைப்பு செய்து போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
அதன்படி ஜி.எஸ்.டி.சாலையின் ஓரத்தில் ஒருபுறத்தில் மட்டுமே இரண்டு மீட்டர் அகலத்திற்கு நடைபாதை, கான்கிரீட் தூண்களுடன் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாமல் தென் மாவட்டம் மற்றும் சென்னையை ஒட்டி உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் சீரமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும்.
இதில் சாலையின் ஓரத்தில் ஒரு புறத்தில் மட்டுமே தூண்கள் அமைத்து கட்டப்படவுள்ளதால் சாலையை ஒட்டி உள்ள பகுதியில் சாலை மார்க்கத்தில் 10 மீட்டர் அகலத்திற்கு காலியிடம் கிடைக்கும். இதன் மூலம் தற்போது இரண்டு வரிசைகளில் செல்லும் வாகனங்கள் 3 வரிசைகளில் செல்ல முடியும்.
இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் சீரமைக்கப்படும் பஸ்நிலையங்களில் நவீன மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள். ஒலிபெருக்கிகள், டிஜிட்டல் பெயர்பலகை உள்ளிட்டவை நவீனமாக அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.