ஊட்டி, குன்னூரில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் டேலியா, சூரியகாந்தி மலர்கள்- சுற்றுலா பயணிகள் பரவசம்
- குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
- வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.
ஊட்டி:
நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.
சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.
மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.
ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.
வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.