சிலிண்டர் வெடித்ததில் சமையலறை கட்டிடம் இடிந்து கிடக்கும் காட்சி.
வேடசந்தூர் அருகே அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
- காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர்.
- பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
4 ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளனர். 2 பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தின் அருகிலேயே சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு இன்று காலை உணவு திட்டத்திற்காக 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் கசிவின் காரணமாக திடீரென தீப்பற்றியது. இதனையடுத்து பணியாளர்கள் இருவரும் தப்பி வெளியே ஓடி வந்தனர்.
அருகிலேயே பள்ளிக்கு வந்த 2 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களையும் அழைத்துக் கொண்டு தூரமாகச் சென்று விட்டனர். தீ பிடித்த சிறிது நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் சமையலறை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சுக்கு நூறானது. மேலும் கட்டிடங்கள் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வருவதற்கு முன்பாகவே இந்த விபத்து நடைபெற்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி அணைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு மாற்று இடத்தில் உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.