தமிழ்நாடு செய்திகள்

உளுந்தூர்பேட்டை கார் விபத்து வழக்கு: மதுரை ஆதீனத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2025-07-20 12:37 IST   |   Update On 2025-07-20 12:37:00 IST
  • சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
  • விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.

மதுரை:

மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனம் ஞான சம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கடந்த மே மாதம் 2-ந்தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் தனது காரில் புறப்பட்டு சென்றார்.

அப்போது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் தன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாகவும் கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் குறிப்பாக "குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்" கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிட்டனர்.

வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை, போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு நேரில் வருகை தந்தனர். முன்னதாக விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.

அதன்படி ஆதீன மடத்தில் இருந்த ஊழியர்கள், பணியார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மதுரை ஆதீனத்திடம் விசாரணை தொடங்கியது.

சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான 3 போலீசார் விசாரணையை தொடங்கினர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் முதன்முறையாக மதுரை ஆதினத்திடம் விசாரணை நடத்தி வருகிறார். சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமரன் மதுரை ஆதின மடத்திற்குள் சென்றார்.

அப்போது அங்கு திரண்ட பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. 

Tags:    

Similar News