பயங்கரவாதி என கூறி என்னை கைது செய்ய முயற்சி- சி.வி.சண்முகம் எம்.பி. பரபரப்பு புகார்
- என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
- குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சி.வி.சண்முகம். இவர் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், மேல்சபை எம்.பி.யாகவும் உளளார். இவர் தன்னை பயங்கரவாதி என கூறி கைது செய்ய முயற்சிப்பதாக டெல்லி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காலையில் பாராளுமன்றத்துக்கு செல்லும் போது ஒரு போன் அழைப்பு வந்தது. அழைப்பாளர் ஆங்கிலத்தில் பேசி, தன்னை மும்பையை சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
அவர் என்னை ஒரு பயங்கரவாதி என்றார். பின்னர் உடனடியாக என்னை கைது செய்யப்போவதாக மிரட்டினார். பின்னர் அந்த அழைப்பு மூத்த போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. இந்த 2-வது அழைப்பாளர் மிரட்டல்களைத் தொடர்ந்தார். என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
இந்த குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுப்பது அதிகரித்து இருப்பதற்கு இது ஒரு சான்றாகும். இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றார்.