தமிழ்நாடு செய்திகள்

சென்னை-திருப்பதி 4 வழிச்சாலையில் 2 கி.மீட்டர் தூரத்துக்கு விரிசல்- பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2025-10-26 12:55 IST   |   Update On 2025-10-26 12:55:00 IST
  • பல இடங்களில் தார்கள் பெயர்ந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
  • சாலை விரிசலை அவசர அவசரமாக ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர்:

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம் சென்னை பாடியில் இருந்து - ரேனிகுண்டா வரை 124 கி.மீ., தூரம் ஆறுவழிச்சாலை பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இதில் சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்தூர் - ரேனிகுண்டா வரையும் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர்-திருநின்றவூர் வரை, 17.5 கி.மீட்டர் சாலை அமைக்கும் பணி சுமார் 80 சதவீதம் முடிந்து உள்ளன.

மேலும் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் குறுக்கிடும் சாலைகளை கடக்கும் வகையில், தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட, திருநின்றவூர் வரை ஏரிகள் மற்றும் சாலைகள் குறுக்கிடும் இடம் என 7 இடங்களில் மேம்பாலம் மற்றும் 10 இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்பட்டு உள்ளது. சாலை அமைக்கப்பட்டு உள்ள இடங்களில் முக்கிய ஊர்களை இணைக்கும் இடங்களில், 'சர்வீஸ்' சாலையும் அமைக்கப்பட்டு வழிகாட்டி பலகை வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனினும் இந்த சாலைப்பணி உரிய தரம் இல்லாமல் அமைக்கப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, பல இடங்களில் தார்கள் பெயர்ந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ள பக்கவாட்டு சுவர்களில் மண் அரிப்பும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக, மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், மண் அப்படியே உள்வாங்கியதால் பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர். அருகில் மற்றும் தலக்காஞ்சேரி, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, காக்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மேம்பாலத்திற்கும், சாலைக்கும் நடுவில் மண் உள்வாங்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் விட்டு, விட்டு சாலையோரங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இதனை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சாலை விரிசலை அவசர அவசரமாக ஒப்பந்ததாரர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சாலையோரங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News