நெல்லை: அரிவாளால் சக மாணவனை வெட்டிய மாணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
- அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
- பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டினான். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 மாணவர்களுக்கு இடையே பென்சில் யாருடையது? என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.
இந்த நிலையில், சக மாணவன், ஆசிரியரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தகுதியான நபர்களை கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.