கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
கொடைக்கானலில் தொடர் மழை - பகலை இரவாக்கிய கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு
- வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
- அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, உகார்த்தேநகர், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், கவிதியாகராஜர் சாலை, பஸ் நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகள், வத்தலக்குண்டு-பழனி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் பகலா, இரவா என்று தெரியாத அளவுக்கு சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
பல இடங்களில் எதிரே வருபவர்கள்கூட தெரியாத நிலை காணப்படுவதால் கடைகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகளை எரியவிட்டு வருகின்றனர். அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரமின்றி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் இன்றும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் மாணவ-மாணவிகள் சென்றனர்.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின் கம்பங்கள், வயர்கள் சாய்ந்து விழுவதும் நடந்து வருகிறது. இதனால் வாகன தடை ஏற்பட்டுள்ளதுடன் மின் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்து றையினர் பார்வையிட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை பொதுமக்களே அகற்றி வருகின்றனர். மழை இன்னும் தீவிரமடையாத நிலையில் தற்போதே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.