பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம்- இரவில் ஆய்வு செய்த ஆட்சியர்
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன.
- பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காகவும், பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிரசவத்திற்காக வரும் பெண்கள், குழந்தை பெற்றதும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போல் பச்சிளம் குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அவ்வாறு பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
இந்த வார்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருப்பதற்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து படுக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் படுக்கைகள் கிழிந்து சேதமாகி இருப்பதும், பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் தரையில் படுத்து படுக்க வைத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைபார்த்ததும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனைகளில் இதுபோன்று சேதமாகி காணப்படும் படுக்கை மற்றும் மெத்தைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.