மார்க்கெட்டுக்கு பெண் அணிந்து வந்த ஆடை சர்ச்சை குறித்து விசாரித்து நடவடிக்கை: கலெக்டர்
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர்.
கோவை:
கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 21-ந்தேதி இவர் சிலீவ் லெஸ் சுடிதார் அணிந்து கோவை பூ மார்க்கெட்டிற்கு வந்தார். அவரிடம் அங்கிருந்த பூ கடை உரிமையாளர் ஒருவர் அரைகுறை ஆடை அணிந்தபடி பூ மார்க்கெட்டிற்கு வரக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண்ணுக்கும், வியபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த இளம்பெண், ஆடை சரியாக தான் இருக்கிறது. உங்களது பார்வையை சரியாக வைத்துக்கொள்ளுங்கள் என வியாபாரியிடம் தெரிவித்தார்.
பூ மார்க்கெட்டில் இருந்த சில வியாபாரிகளும் அந்த இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இளம்பெண் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆடைகுறித்து ஆபாசமாக பேசிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். அதேபோன்று பூ வியாபாரிகள் சங்கத்தினரும் இளம்பெண் மீது புகார் அளித்துள்ளனர். அதில், பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால் வீடியோ எடுக்க வேண்டாம் என்றோம். வியாபாரிகளை தவறாக சித்தரித்து உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோவை அண்ணாசிலை பகுதியில் நடந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறும்போது,
போலீசார் இதுதொடர்பாக புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.