ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி- முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
- வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
- தமிழக அரசு சார்பில் ரூ.6,687.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை பிறக்கப்பட்டது.
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை பெற்றுக்கொள்ள வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.6,687.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அரசாணை பிறக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.