தமிழ்நாடு செய்திகள்

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா காணொளியை வெளியிட்டார் முதலமைச்சர்

Published On 2024-12-11 12:14 IST   |   Update On 2024-12-11 12:14:00 IST
  • தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.
  • மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் பெரியார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டதன் நினைவாக தமிழ்நாடு அரசு சார்பில் 70 சென்ட் பரப்பில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்து உள்ளது. மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டு உள்ளது. ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நாளை காலை நடைபெறுகிறது.

திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் பெரியார் தலைமையில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News