தமிழ்நாடு செய்திகள்

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Published On 2025-05-29 13:03 IST   |   Update On 2025-05-29 13:43:00 IST
  • மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.
  • ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.

'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராஜேஷ் (வயது 75). தொடர்ந்து கன்னிப் பருவத்திலே, அச்சமில்லை, சாமி, ரெட், ஆட்டோகிராப் என தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞ ராகவும் பணியாற்றி வந்த ராஜேஷ் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

45 ஆண்டு காலமாக சினிமாத்துறையில் பயணித்து வரும் ராஜேஷ் குடும்பத்துடன் ராமாபுரத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஷ் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது திடீர் மறைவு திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜேஷ் மறைவு பற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலுக்கு ஏராளமான திரை உலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ராஜேஷ் மனைவி ஜோன்சில்வியா கடந்த 2012-ம் ஆண்டு காலமானார். ராஜேசுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ராமாபுரத்திலுள்ள இல்லத்தில் நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோரும் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News