உட்கட்சிப் பிரச்சனைகளை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும்- முதலமைச்சர் மண்டல பொறுப்பாளர்களுக்கு உத்தரவு
- உடன்பிறப்பே வா - நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
- பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டார்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா - நிகழ்ச்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் இன்று 80-வது தொகுதியாக ஒசூர் நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டார்.
அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் பெரும்பாலான வற்றுக்கு உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காண்கிறார். நேற்று ராஜபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படவில்லை என்ற கோரிக்கையைத் தீர்க்க அமைச்சர் மா.சுப்பிரமணியனை உடனடியாக அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசனை செய்தார்.
உட்கட்சிப்பூசல்கள் கவனத்திற்கு வந்தால் இரு தரப்பையும் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கிறார். மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அவ்வப்போது ரிப்போர்ட் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.