100 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு, பரவசமூட்டும் பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறுகள், கோவில் கலை நூல்கள், சிலை நூல்கள், காவிய நூல்கள், ஓவிய நூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியார்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தர் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை 2 கட்டங்களாக 216 பக்தி நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியிடப்பட்ட பக்தி நூல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 103 கோவில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டத்தில், "இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக வெளியீடுகளை விற்பனை செய்வதற்கு 103 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், கூடுதலாக 100 கோவில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை செயல்படுத்திடும் வகையில் 100 கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ஹரிப்ரியா, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.