தமிழ்நாடு செய்திகள்

மாணவி பிரேமாவுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு கட்டும் பணியை ஆய்வு செய்த முதலமைச்சர்

Published On 2025-10-29 12:34 IST   |   Update On 2025-10-29 12:34:00 IST
  • கழுநீர்குளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தச்சொன்னார்.
  • மாணவி பிரேமாவுக்கு போன் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நெல்லை:

சென்னையில் கடந்த மாதம் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பெற்ற மாணவ-மாணவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார்.

அப்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தை சேர்ந்த பிரேமா என்பவர் பேசியபோது, தான் கல்லூரி விடுதியில் தங்கி படித்ததாகவும், கஷ்டப்பட்டு படிக்க வைத்த தன் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து உடனடியாக அவருக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டி கொடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து கலெக்டர் கமல்கிஷோர் கடந்த 27-ந்தேதி சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கே நேரடியாக சென்று கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு செல்லும் வழியில் உள்ள கழுநீர்குளத்தில் தனது வாகனத்தை நிறுத்தச்சொன்னார்.

திடீரென அவர் மாணவி பிரேமாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று கனவு இல்லம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவி பிரேமாவுக்கு போன் செய்து உணர்ச்சி பொங்க பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் பெற்றோரிடமும் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து விழா மேடைக்கு புறப்பட்டார்.

Tags:    

Similar News