தமிழ்நாடு செய்திகள்

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை - சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-05-26 12:36 IST   |   Update On 2025-05-26 12:36:00 IST
  • சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன.
  • மே 30ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் சென்னையில் பல பகுதிகளில் காணப்படுகிறது. கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவில் போடப்பட்டும், பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.

சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மே 30ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க கோரி மும்பையில் உள்ள இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் வழங்க கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அதுவரை தமிழில் பெயரை பலகை வைக்காத கடைகள் கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாதுஎன்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tags:    

Similar News