சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை
- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கடந்த ஏப்ரல் மாதம் புறநகர் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கோடை காலத்தில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையிலும் கூட ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை. இந்த ரெயிலில் பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை. 12 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3,798 பேர் பயணம் செய்ய முடியும். ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். சென்னையில் மெட்ரோ ரெயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் முழு அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஏ.சி. மின்சார ரெயிலில் 50 சதவீத பயணிகள் கூட பயணம் செய்யவில்லை. சென்னையில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் விரைவில் 2-வது மின்சார ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு இல்லாமல் போனதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதே காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பூஜ் முதல் அஞ்சார் வரை இயக்கப்படும் வந்தே மெட்ரோ ரெயிலுடன் ஒப்பிடும்போது, அங்கு 42 கி.மீ. பயணத்திற்கு ரூ.55 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தாம்பரம் - கடற்கரை இடையே 30 கி.மீ. பயணத்திற்கு கட்டணம் ரூ.85 ஆக உள்ளது.
10 கி.மீ. வரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மாதாந்திர சீசன் டிக்கெட் விலை ரூ.2,115 ஆகவும், கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ரூ.1,705 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது. ஏ.சி. மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை நீண்ட வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதன் பயண நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாகும். இது தினமும் 10 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு குறுகிய சேவைகளாக இயக்கப்பட வேண்டும். காலை மற்றும் மாலையில் நெரிசலான நேரங்களில், சாதாரண மின்சார ரெயில்களுக்கு இணையாக, கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளை வழங்க வேண்டும். கட்டணத்தையும் குறைத்து கூடுதல் ரெயில் சேவைகளை இயக்கினால் ஏ.சி. மின்சார ரெயில்கள் பயணிகளின் வரவேற்பை பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.