காட்டுமன்னார்கோவிலில் மத்திய குழுவினர் ஆய்வு- விரைவில் இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
- கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
- ராஜேந்திர சோழகன் கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினமும், நேற்றும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.
இன்று காலை அவர்கள் கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டனர்.
மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர் நவீன் தலைமையில் உதவி இயக்குனர் பிரித்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே, சென்னை எப்.சி.ஐ. தரக்கட்டுபாடு மேலாளர் பாஸ்கர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர்.
முதலில் முட்டத்தில் அவர்கள் பாதித்த பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் ராஜேந்திர சோழகன் கிராமத்திற்கு சென்றனர். அங்கு சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தனர். அவர்களிடம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து விரைவில் தங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.