கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- மர்ம கடிதம் குறித்து விசாரணை
- கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர்.
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தபால் வந்தது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசு வக்கீல் பெயரில் வந்திருந்த தபாலை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர்.
அந்த கடித்தத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருசிலர் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் பற்றிய விவரம் எனக்கு தெரியும். என் உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் கந்தசாமி விசாரணை நடத்தினார்.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அரசு வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயரில் யாரோ ஒருவர் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.
மேலும் இதே போன்ற கடிதம் அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து அந்த கடிதம் கோவைக்கு அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அந்த கடிதத்தை அனுப்பிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.