அ.தி.மு.க. அலுவலகம் உள்பட சென்னையில் 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- தகவலறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
- சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை:
கடந்த சில நாட்களாக மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கட்சித் தலைமை அலுவலகம் என முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அடுத்தடுத்து விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தீவிர சோதனைக்குப் பிறகு அனைத்து மிரட்டல்களும் புரளி எனத் தெரிய வந்ததையடுத்து, மக்கள் நிம்மதியடைந்தனர். இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகம், வானிலை ஆய்வு மையம் ஆகிய மத்திய அரசு நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதில், வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும், ஜி.எஸ்.டி. மற்றும் பி.ஐ.பி. அலுவலகங்களுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவலறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் பல மணி நேரம் சோதனை நடத்தினர். இறுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்காததால், அது புரளி என உறுதி செய்யப்பட்டது.
இதேபோல், நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பெயரில் ஒரு மிரட்டல் வந்தது.
அதில், வர்த்தக மையத்திலும், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை இல்லத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. உடனடியாக சென்னை வர்த்தக மையத்தில் நந்தம்பாக்கம் போலீசார் சோதனையிட்டனர்.
அதேநேரத்தில் மதுரை போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அங்கும் சோதனை நடத்தப்பட்டது. இரு இடங்களிலும் வெடி பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு, பல மணி நேரம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மிரட்டல்களும் வதந்தி எனத் தெரியவந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் அங்கு விரைந்த போலீசார், அலுவலகம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் இதுவும் புரளி எனத் தெரியவந்தது.
அடுத்தடுத்து முக்கிய பிரமுகர்களின் பெயர்களில், முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் சென்னையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியே வழக்குப்பதிந்து, இந்த தொடர் புரளிகளின் பின்னணியில் உள்ள மர்ம நபர்களைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.