தமிழ்நாடு செய்திகள்

அடிப்படை வசதிகள் தேவை..!- ரெயில்வே கோட்ட மேலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

Published On 2025-08-22 19:47 IST   |   Update On 2025-08-22 19:47:00 IST
  • கன்னியாகுமரி மக்கள் சார்ப்பாக பல்வேறு ரெயில்வே கோரிக்கைகளை முன் வைத்தார்.
  • ஐதராபாத்- சென்னை சார்மினார் விரைவு ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க கோரிக்கை.

ரெயில்வே நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, அடிப்படை வசதிகள் அமைத்து தர ரெயில்வே கோட்ட மேலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரெயில் நிறுத்தங்கள், ரெயில்களின் நீட்டிப்பு, ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், ரெயில் உட்கட்டமைப்பு பணிகள் குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே மேலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளராக பொறுப்பேற்ற திவ்யகாந்த் சந்திராகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி மக்கள் சார்ப்பாக பல்வேறு ரெயில்வே கோரிக்கைகளை முன் வைத்தார்.

ரெயில்கள் நீட்டிப்பு:

மங்களூர்- திருவனந்தபுரம் இடையே இரவு ரெயிலாக இயங்கும் விரைவு ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் திருவனந்தபுரம் நாகர்கோவில் பயணிகள் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அது போன்று ஐதராபாத்- சென்னை சார்மினார் விரைவு ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

ரெயில் நிறுத்தங்கள்:

திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரெயிலுக்கு இரணியல் ரெயில் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் எனவும், புனலூர் மதுரை ரெயிலுக்கு பள்ளியாடியில் நிறுத்தம், ஜாம்நகர் விரைவு ரெயில், காந்திதாம் விரைவு ரெயிலுக்கு குழித்துறையில் நிறுத்தம் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து அந்த ரெயிலை வாராந்திர ரெயிலாக நிரந்தரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும், நாகர்கோவில் தாம்பரம் ரெயிலை தினமும் இயக்க வேண்டும், திருவனந்தபுரம் நாகர்கோவில் இடையே முழு ரெயில்கள் வேண்டும்.

ரெயில் நிலைய மேம்பாடுகள்:

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மற்றும் இரணியல் ரெயில் நிலையங்களுக்கு இரண்டாவது நுழைவாயில் அமைத்தல், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திற்கு நான்கு வழி சாலையில் இருந்து செல்ல சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ஆவன செய்ய வேண்டும்.

உட்கட்டமைப்பு வசதிகள்:

திருவனந்தபுரம் நாகர்கோவில் இடையிலான ரெயில் பாதை இரட்டிப்பு பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் எனவும், மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் எனவும், நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைவில் முடித்து மக்கள் உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், விரிகோடு மேம்பால பணிகளை அந்த பகுதி மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்க நெடுஞ்சாலை துறையுடன் ஆலோசித்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News