தமிழ்நாடு செய்திகள்

மாரத்தானில் பங்கேற்ற வங்கி ஊழியர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

Published On 2025-10-05 15:57 IST   |   Update On 2025-10-05 15:57:00 IST
  • தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
  • கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக பகுதியில் இன்று மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று அதிகாலை தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தாம்பரத்தை சேர்ந்த 24 வயது வங்கி ஊழியரான பரமேஷ் என்பவரும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

இந்தநிலையில் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பரமேசுக்கு வலிப்பு ஏற்பட்டது. தரையில் சுருண்டு விழுந்தார். அவரைப் பார்த்து மாரத்தானில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் பரமேஷ் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News