கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் - அய்யாக்கண்ணு
- கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் வரும் 19-ந்தேதி நடத்த உள்ளோம்.
- விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும்.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு, விவசாய சங்க தலைவர் நாகை காவிரி தனபாலன், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
காவிரியில் மாதந்தோறும் நீர் பங்கீடு செய்வதை நிறுத்தி தினந்தோறும் நீர் பங்கீடு செய்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், மரபணு திருத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் வரும் 19-ந்தேதி நடத்த உள்ளோம்.
மேலும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனிநபர் இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாளை மறுநாள் (17-ந்தேதி) நூற்றுக்கணக்கான விவசாயிகள் திருச்சியில் இருந்து டெல்லி செல்கின்றனர்.
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். பீகார் தேர்தலில் கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் வருகிற ஜனவரி மாதம் கள் விடுதலை மற்றும் மதுவிலக்கு மாநாடு நடத்த உள்ளோம்.
இது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது விவசாய சங்கத் தலைவர்கள் தஞ்சை பழனியப்பன், தீட்சிதர் பாலசுப்ரமணியன், அர்ஜுனன், வாரணவாசி ராஜேந்திரன், நாகை ராமதாஸ், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மேகராஜன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.