தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு

Published On 2025-04-18 14:58 IST   |   Update On 2025-04-18 14:58:00 IST
  • பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
  • பஸ்களை திருப்புவதற்கும், பஸ் நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களில் செல்ல விரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் நடந்து ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது பொருட்கள், பெரிய பைகளுடன் வரும் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதால் பலரும் கால்டாக்ஸியை நாடுகின்றனர்.

எனவே விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மாநகர பஸ்களை அனுமதித்து இதற்காக தனியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பஸ்கள் விரைவில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகர பஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பயணிகளின் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். விமான அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மாநகர பஸ்கள் விமான நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்கு தயாராக உள்ளோம். ஆனால் பஸ்களை திருப்புவதற்கும், பஸ்நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன. இது சரிசெய்த பின்னர் மாநகர பஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் என்றனர்.

Tags:    

Similar News