தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்காத மாநில கல்வி கொள்கையால் பயனில்லை- அன்புமணி
- அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது.
- பணம் இருந்தால் மட்டும் தான் தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஓரளவு தரமானக் கல்வியைக் கற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, 11ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து, எண்மக் கல்வி, காலநிலை மாற்றக் கல்வி போன்ற சில திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ்க் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது; பணம் இருந்தால் மட்டும் தான் தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஓரளவு தரமானக் கல்வியைக் கற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையை மாற்றும் வகையில் புரட்சிகரமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு பதிலாக அரசு பள்ளிகளின் மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு திருப்பி விடும் கொள்கையை தமிழக அரசு தயாரித்திருக்கிறது. அரசு பள்ளிகள் மேலும் சீரழியவே இது வழிவகுக்கும். தாய்மொழியை ஊக்குவிக்காத, தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்காத மாநில கல்விக் கொள்கையால் பயனில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.