தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை- அமைச்சர் பேச்சுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்- அன்புமணி

Published On 2025-06-18 14:54 IST   |   Update On 2025-06-18 14:54:00 IST
  • அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.
  • டைடல் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிக்கும் அதிகாரம் தமக்கு அளிக்கப்படவில்லை என்று பழனிவேல் கூறினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிற்துறை வளர்ச்சியில் ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற பிற தென் மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாடு தீவிரம் காட்டவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் தொழில்துறையின் வளர்ச்சி பிற தென் மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மதுரையில் நேற்று நடைபெற்ற புதுமதுரை 2035 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஆவணம், இலட்சினை ஆகியவற்றை வெளியிடுவதற்கான நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். அண்மையில் சட்டப்பேரவையில் பேசும் போது, டைடல் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிக்கும் அதிகாரம் தமக்கு அளிக்கப்படவில்லை என்று கூறினார். தமிழகத்தில் 50% மது பாட்டில்கள் வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.

நிதித்துறை அமைச்சராக இருந்த போது ஒரு தொலைபேசி உரையாடலில் ,'' உதயநிதியும், சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்து விட்டனர்" என்று கூறியதாக சர்ச்சைகள் வெடித்தன. எனவே, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த அமைச்சரின் பேச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன என்று பாமக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தான் அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.

Tags:    

Similar News