மிரட்டி கடன் வசூலிக்கும் முறை: தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி வற்புறுத்தல்
- புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல்.
4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற இந்த கடனுக்கான தவணையை அவர் சரியாக செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை.
அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ, வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம் விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதால் புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் உழவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது தான் இத்தகைய தனியார் வங்கிகளிடம் உழவர்கள் சிக்கிக் கொள்வதற்கு காரணம் ஆகும். எனவே, சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.