தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் புகைக்கும் வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Published On 2025-06-02 10:37 IST   |   Update On 2025-06-02 10:37:00 IST
  • தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது.
  • பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழகம், பல நூறு முறை வலியுறுத்தியும் கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

உலகில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் சில லட்சம் பேருக்கு மட்டும் தான் அப்பழக்கம் உள்ளது. அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டும் தான் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். ஆனால், இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கிறார்கள்.

அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 விழுக்காட்டினரும், பெண்களில் 15 விழுக்காட்டினரும் புகைப்பிடிப்பது உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் தான் இந்தியாவில் புகைக்க தடை விதிப்பது அவசியம் ஆகும்.

தேசிய அளவில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது. அதனால், பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்த வரம்பை ஆண்டுக்கு ஒரு வயது வீதம் உயர்த்துவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டை புகைப்பிடிக்கும் வழக்கமில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News