தமிழ்நாடு செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தின் சீரழிவுக்கு தி.மு.க. ஆட்சியே காரணம்- அன்புமணி குற்றச்சாட்டு

Published On 2025-12-03 14:04 IST   |   Update On 2025-12-03 14:04:00 IST
  • கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது தான்.
  • பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நவீன இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் 65 சதவீதம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 5 ஜனாதிபதிகளை இந்தியாவுக்கு வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்போது பாடம் நடத்துவதற்குக் கூட ஆளில்லாத நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 515 ஆசிரியர் பணியிடங்களில் 180, அதாவது 35 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 335, அதாவது 65 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 94 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே உள்ளனர்.

அவர்களிலும் கணிசமானவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். 127 இணைப் பேராசிரியர்களில் வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 85 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே போல், 294 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 197 இடங்கள், அதாவது 67 சதவீதம் பணியிடங்கள் இன்றைய நிலையில் காலியாக கிடக்கின்றன.

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களால் தான் தினமும் ஓரிரு வகுப்புகளாவது நடைபெறுகின்றன.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் மாணவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி பல்கலைக்கழகத்தின் பிற செலவுகளுக்கு திருப்பி விடப்படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களையும், தற்காலிகப் பட்டச் சான்றுகளையும் அச்சடிப்பதற்கு கூட நிதி இல்லை. அதனால் நடப்பாண்டில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது தான். பல்கலைக்கழகங்களை மீட்டெடுக்கப்போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த திமுகவின் ஆட்சியில் தான் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியும், சீரழிவுகளும் அதிகரித்தன. அந்த வகையில் தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களை சீரழித்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். அதை செய்யத் தவறினால் வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர் என்றார். 

Tags:    

Similar News