அண்ணாநகர், தண்டையார்பேட்டையில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு- அன்புமணி கண்டனம்
- குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை.
- பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் மீதமிருக்கும் அண்ணாநகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றும் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் நலனில் எந்த அக்கறையும் இல்லாமல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே, ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் ஒப்பந்தத்தை தனியாரிடம் வழங்கிய திமுக அரசு, அதற்காக ரூ.2300 கோடி மக்களின் வரிப்பணத்தை தனியார் நிறுவனத்திற்கு வாரிக் கொடுத்தது. இப்போது அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கான ஒப்பந்தத்தின் மூலம் இன்னும் கூடுதலான தொகையை வாரி வழங்க இருக்கும் தி.மு.க. அரசு, அதற்கான வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகத் தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றுகிறது.
ஆட்சியாளர்கள் லாபம் அடைவதற்காக தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும்போது, தூய்மைப் பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு பறிக்கப்படும்; ஊதியம் சுரண்டப்படும். ஆனால், இதைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. குப்பை அள்ளுவதில் கூட கொள்ளை அடிப்பது தான் தி.மு.க. ஆட்சியாளர்களின் கொள்கை ஆகும்.
தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாநகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.