ஈரோடு- ஜோக்பானி இடையே அம்ரீத் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை: வியாழக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது
- ஜோக்பானி வரை வாராந்திர ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஜோக்பானிக்கு சென்றடையும்.
ஈரோடு:
குறைந்த கட்டணத்தில் நீண்ட தொலைவுக்கு குளிர்சாதன வசதி இல்லாத ரெயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் அம்ரீத் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரெயில்வே வாரியத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக ஈரோட்டில் இருந்து பீகார் மாநிலம் ஜோக்பானி வரை வாராந்திர ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
இதற்கான உத்தரவு கடந்த 4-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை தோறும் ஈரோட்டில் இருந்தும், ஞாயிற்றுக்கிழமை தோறும் ஜோக்பானியில் இருந்தும் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
ஈரோடு- ஜோக்பானி இடையில் இயக்கப்படும் ரெயில் எண் (16601) வியாழக்கிழமைதோறும் ஈரோட்டில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை, கூடூர், விஜயவாடா, கம்மம், வாரங்கல் சென்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஜோக்பானிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ஜோக்பானி- ஈரோடு இடையிலான ரெயில் எண் (16602) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:15 மணிக்கு ஜோக்பானியில் இருந்து கிளம்பி புதன்கிழமை காலை 7:30 மணி அளவில் ஈரோடு வந்தடையும்.
இரண்டாம் வகுப்பு பயணிகள் இருக்கை மற்றும் லக்கேஜ் கொண்டு செல்லும் வசதியுடன் 8 பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு பயணிகள் இருக்கையுடன் கூடிய 11 பெட்டிகள் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும்.
மொத்தம் 3300 கி.மீ. பயணிக்கும் இந்த ரெயில் 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வேயின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.