ரிதன்யாவின் குடும்பத்தினரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்த காட்சி.
ரிதன்யா குடும்பத்திற்கு நீதி கேட்டு விரைவில் போராட்டம்- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவிப்பு
- பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காவல்துறை செயல்பாடு இருக்க வேண்டும்.
- சாதி மறுப்பு திருமணங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கணவர், மாமனார், மாமியார் தொல்லை காரணமாக தற்கொலை செய்த புதுப்பெண் ரிதன்யாவின் குடும்பத்தினரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். குடும்பத்தினர் கூறும் போது பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். வரதட்சணை கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வருகிற போது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரதட்சணை என்பது குற்ற செயல்.
வரதட்சணை என்பது குற்றம் என்று அரசு பிரசாரத்தை மக்களிடமும், கல்லூரிகளிலும் மேற்கொள்ள வேண்டும். இந்த பிரசாரம் என்பது மகளிர் நல துறையின் மூலமாக நடத்த வேண்டும்.
குறிப்பாக கோவை, திருப்பூர் போன்ற மா வட்டங்களில் வரதட்சணை கொடுமைகள் அதிகம் நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக அரசு இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர், மாமியார் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரையும் கைது செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் காவல்துறை செயல்பாடு இருக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். ரிதன்யா தற்கொலை சம்பவத்தில் நீதி கேட்டு திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஓரிரு தினங்களில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.