தமிழ்நாடு செய்திகள்

அட்சய திருதியை நாளில் 27,440 பத்திரப்பதிவு: ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம் - அமைச்சர் தகவல்

Published On 2025-05-01 13:34 IST   |   Update On 2025-05-01 13:34:00 IST
  • அட்சய திருதியை நாளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
  • 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது.

சென்னை:

பத்திரப்பதிவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மங்களகரமான நாளான நேற்று (ஏப். 30-ந் தேதி) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.

2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News