கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு- தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 2 அணைகளில் இருந்து மொத்தம் 95ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வர தொடங்கி அணை மீண்டும் இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 50ஆயிரம் கனஅடி முதல் 70ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படலாம். இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி எதிரே உள்ள தங்கமாபுரி பட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதியில் வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.