தமிழ்நாடு செய்திகள்

பொங்கலுக்கு 10 சிறப்பு ரெயில்கள்: நெல்லை, தூத்துக்குடிக்கு பகல் நேரத்திலும் இயக்கம்

Published On 2026-01-08 11:49 IST   |   Update On 2026-01-08 11:49:00 IST
  • தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
  • ரெயில்களில் எல்லாம் இடங்கள் நிரம்பிவிட்டதால் மேலும் 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடச் சொல்லும் பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.

குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் தென் மாவட்ட பகுதி மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக அறிவிக்கப்பட்ட இந்த ரெயில்களில் எல்லாம் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.

ஒரு சில ரெயில்களில் ஏசி படுக்கைகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இதேபோல கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களும் நிரம்பி விட்டதால் கூடுதலாக 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு ரெயில்களில் 8 ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே 6 ரெயில்களும், சென்னை-தூத்துக்குடி இடையே 2 ரெயில்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல சென்னை சென்ட்ரல்-போத்தனூர் இடையே 2 சிறப்பு ரெயில்களும் அறிவிக்கட்டு இருக்கிறது.

கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள 10 சிறப்பு ரெயில்களில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 8 ரெயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.

அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் 2 ரெயில்கள் பகல் நேரத்தில் அமர்ந்து செல்லக் கூடிய கூடியது. திருநெல்வேலி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 13 மற்றும் 20-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரெயில் அன்று பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு அதிகாலை 2 மணிக்கு சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரயிலில் ஏசி சேர் கார், சாதாரணமாக உட்கார்ந்து செல்லக்கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி இதில் இல்லை. இதே போல 14-ந் தேதி திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே பகல் நேர சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-தாம்பரம் இடையே 12 மற்றும் 19-ந் தேதி பகல் நேர படுக்கை வசதி சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி இடையே 12 மற்றும் 19-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி-சென்ட்ரல் இடையே 13 மற்றும் 20-ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை வழியாக செல்கிறது.

இந்த 8 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ஆன்லைன் வழியாகவும், ஏஜென்சி மூலமாகவும் டிக்கெட்டை பெறுவதில் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு சிலர் மட்டுமே ரெயில் நிலையங்களில் அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.

தெற்கு ரெயில்வே இந்த ஆண்டு தென் மாவட்டங்களுக்கு அதிக ரெயில்களை இயக்கி வருவது சிறப்பாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களில் எப்படியாவது பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஒரே நாளில் சேரும் வகையில் பகல் நேர ரெயில்கள் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News