தமிழ்நாடு செய்திகள்

ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள்- அரசு தேர்வுத்துறை

Published On 2025-02-17 08:00 IST   |   Update On 2025-02-17 08:00:00 IST
  • பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
  • குற்றத்தின் தன்மை, ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது.

சென்னை:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை 12 லட்சத்து 14 ஆயிரத்து 379 பள்ளி மாணவர்கள், 12 லட்சத்து 93 ஆயிரத்து 434 பள்ளி மாணவிகள், 48 ஆயிரத்து 987 தனித்தேர்வர்கள், 554 சிறைவாசிகள் என மொத்தம் 25 லட்சத்து 57 ஆயிரத்து 354 பேர் எழுத இருக்கிறார்கள்.

இவர்களில் முதலாவதாக பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத் தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசுத் தேர்வுத் துறை தயாராக உள்ளது.

அந்த வகையில் பொதுத் தேர்வுகளின் போது ஆள்மாறாட்டம், 'பிட்' அடிப்பது போன்ற 15 வகையான ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்? என்ற விவரங்களை அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, துண்டுத்தாள் (பிட்), அச்சடித்த குறிப்புகள் வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, அடுத்த ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். துண்டுத்தாள், சீட்டு, புத்தகம் வைத்து பார்த்து தேர்வு எழுதி பிடிபட்டால், அந்த தேர்வரின் அனைத்து பாடத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும். குற்றத்தின் தன்மை, ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த இரு பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது.

மற்ற தேர்வரின் விடைத்தாள்களை பார்த்து எழுதியது, பரிமாற்றம் செய்தது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால், தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓராண்டு அல்லது குறிப்பிடத்தக்க பருவங்கள் தேர்வுகள் எழுத தடைவிதிக்கப்படும்.

ஆள்மாறாட்டம் செய்து தேர்வை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, பொதுத் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். தேர்வறை கண்காணிப்பாளரிடம் தேர்வறையிலோ அல்லது தேர்வறைக்கு வெளியிலோ தேர்வர்கள் தவறாக நடந்து கொண்டாலோ, தகாத வார்த்தைகளால் திட்டினாலோ, தாக்கினாலோ அந்த தேர்வரின் பிற பாடத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத தடை, நிரந்தர தடை விதிக்கப்படும். வினாத்தாளில் விடை எழுதி பிற தேர்வருக்கு தூக்கி எறிந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த தேர்வரின் அப்பாடத் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News