ஆதவ் அர்ஜுனா பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார் - திருமாவளவன்
- கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம்.
- அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதவ் அர்ஜுனா நல்ல நோக்கத்தில் தான் கட்சியில் வந்து இணைந்தார். பல அரசியல் கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு இருக்க முடியும்.
ஆனாலும் கூட தலித் மக்களின் உணர்வுகளுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி கட்சியின் மாநாட்டில் இணைத்துக் கொண்டார்.
அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயமான கோபங்கள், மக்கள் நலன் கருதி நான் வெளியிடும் கருத்துகள், பாதிப்புக்குரிய இடைவெளி ஏற்படுவதாக இருக்கிறது. அதற்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே விலகுகிறேன் என கூறியிருக்கிறார்.
இடை நீக்கம் செய்யப்பட்ட பிறகு பொது வெளியில் கருத்து சொல்வது வழக்கம் இல்லை. தலைமை அல்லது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அவர் விளக்கம் அளிக்கலாம்.
அந்த விளக்கம் ஏற்கப்பட்டு நடவடிக்கை தேவையில்லை என தலைமையோ ஒழுங்கு நடவடிக்கையோ கருதினால் மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படும்.
இடை நீக்கம் செய்யப்பட்ட அன்றே வெளியிட்ட அறிக்கை இடை நீக்கம் குறித்து சொன்ன கருத்து கட்சிக்கு எதிராக தலைமைக்கு எதிராக தான் இருந்தது.
விளக்கம் அவருடைய பார்வையில் சரியாக இருந்தாலும் கூட ஒரு கட்சியின் நடைமுறைக்கு ஏற்புடைதாக இல்லை. ஒரு கட்சிக்கு வருபவர் அந்த கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
நமக்கு எல்லாம் தெரியும் என்றாலும் கூட பேசுவது சரி தான் என்றாலும் கூட மக்களுக்காக தான் செயல்படுகிறோம் என்றாலும் கூட கட்சி ஒரு கட்டுபாட்டை விதிக்கிறது. அந்த கட்டுபாட்டிற்குள் இருந்து இயங்க வேண்டும். அதற்கு இணங்குவது தான் முக்கியமானது.
ஒரு கட்சிக்கு வந்து விட்டால் எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுபடுவது முக்கியமானது. கட்சியின் நடைமுறைக்கு இணங்கி செயல்படுவது முக்கியம். கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம். குரல் நியாயமானதாக இருக்கலாம்.
அந்த குரல் கட்சியின் வழியாக ஒலிக்க வேண்டும். கட்சியின் நலன்களுக்கு இணங்கி செயல்பட வேண்டும். அதை அவரிடம் பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறோம். கட்சியில் இருந்து விலகும் முடிவை அவருக்கு சரி என்ற வகையில் எடுத்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதோ கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதோ நம்முடைய நோக்கம் இல்லை. நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும் என்பதற்காக தான் இடைநீக்கம் நடவடிக்கை ஆகும்.
ஆதவ் அர்ஜுனா பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார். தலித், பழங்குடி மக்களுக்காக போராட வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் அவசரம் கூடாது. அமைப்புக்கு இணங்கி செயல்பட வேண்டியது அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.