அரபிக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
- தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தென்மேற்கு பருவமலை கேரளாவில் இன்னும் 3 முதல் 4 நாட்களில் துவங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.