வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம்
- காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது.
- சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சுமார் 10 நாட்களுக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு கடந்த 2 வாரமாக பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் இலங்கை கடற்கரையில் இருந்து தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ந் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வருகிற 17-ந்தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் வருகிற 19-ந் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.