தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி வெடி விபத்துக்களை எதிர்கொள்ள 8 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார்

Published On 2025-10-17 10:50 IST   |   Update On 2025-10-17 10:50:00 IST
  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
  • சென்னை பெருநகரில் பட்டாசு விற்பனைக்கு 1088 கடைகளுக்கு தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு வெடி விபத்துக்களை எதிர்கொள்ள 8 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர் பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்களும் நாளை (18-ந் தேதி) முதல் தொடர் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னை பெருநகரில் மட்டும் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு நாளை மாலை 5 மணி முதல் 22-ந் தேதி காலை 8 மணி முடிய, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

தீபாவளி திருநாளின்போது, சென்னை நகரில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் தீயணைப்பு வாகனங்களுக்கு, தண்ணீர் வழங்க சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திடமிருந்து 50 தண்ணீர் லாரிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து தமிழகம் முழுவதிலும் 2705 இடங்களில் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்) விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகரில் பட்டாசு விற்பனைக்கு 1088 கடைகளுக்கு தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 770 கடைகளுக்கும் சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கும் தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News