தமிழ்நாடு செய்திகள்

கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன்

Published On 2025-11-09 09:33 IST   |   Update On 2025-11-09 09:33:00 IST
  • கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும்.
  • 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

கிளிமஞ்சாரோ சிகரமானது தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலையாகும்.

இது ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் அனைத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கிறது. இயற்கை எழிலுடன் கூடிய இந்த சிகரத்தை தொடுவது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. பல கோடி செலவில் தயாரிக்கப்படும் ஒரு சில திரைப்படங்களிலும் இங்கு காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

இந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன.

இதில், கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலையாக உள்ளது. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை.

ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும். இந்த கிளிமஞ்சாரோ மலைமீது ஏற பல்வேறு மலைவழிகள் உள்ளன.

அதில் "மச்சாமே" என்பது சிறந்த பாதையாக கண்டறியப்பட்டுள்ளது. கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இதுபற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். இதில் ஏறுவது எளிமையானதாக கருதப்பட்டாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் கடினத்துடன், ஆபத்தானதாகவும் உள்ளது.

மலையேறும் அனைவருமே மூச்சுவிடக் கடினம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" என்று அழைக்கப்படும் கொடுமுடியை அடைகிறார்கள்.

குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.

இந்தநிலையில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உள்பட 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

அதுபற்றிய விபரம் வருமாறு:-

தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ் செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் (5,895 மீ.) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளனர்.

இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (வயது 5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல் (32), காங்கயத்தை சேர்ந்த 40 வயதான அமர்நாத் ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர்.

மேலும், தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4,720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.

உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு படைத்துள்ளார்.

அதேபோல் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News