தமிழ்நாடு செய்திகள்

பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

Published On 2025-07-03 13:07 IST   |   Update On 2025-07-03 13:07:00 IST
  • சிறுவன் ரியாசுக்கு அவனது தாத்தா, பாட்டி ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவதற்காக ஆசையுடன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
  • பழத்தை எடுத்து விழுங்கிய சிறுவனுக்கு சிறிது நேரத்தில் அதன் விதை தொண்டையில் சிக்கியுள்ளது.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெரு பகுதியை சேர்ந்தவர் நிஜாம் (வயது 35). இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் ரியாஸ் என்ற மகன் உள்ளார்.

நிஜாம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது பெற்றோர் வீட்டில் நிஜாமின் மனைவி தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுவன் ரியாசுக்கு நேற்று இரவு அவனது தாத்தா பாட்டி ரம்புட்டான் பழத்தை சாப்பிடுவதற்காக ஆசையுடன் வாங்கிக் கொடுத்துள்ளனர். உடனே சிறுவன் ரியாசும் அந்த பழத்தை வாங்கி சாப்பிட்டுள்ளான்.

அப்போது பழத்தை எடுத்து விழுங்கிய சிறுவனுக்கு சிறிது நேரத்தில் அதன் விதை தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் சிறுவன் மூச்சுத்திணறி துடித்துள்ளான்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவனது தாத்தாவும், பாட்டியும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு ரியாசை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மகன் இறந்த தகவலை கேள்விப் பட்டு அவரது தந்தை கதறி துடித்தார். தற்போது அவர் வெளிநாட்டிலிருந்து நெல்லைக்கு புறப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News