தமிழ்நாடு செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தை பலி- உறவினர்கள் சாலை மறியல்

Published On 2025-04-11 15:07 IST   |   Update On 2025-04-11 15:07:00 IST
  • குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கடுகுநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி பிரீத்தா, இவர்களுக்கு 4 வயதில் பிரசாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், கடந்த 30-ந் தேதி வீட்டின் படியிலிருந்து பிரசாந்த் தவறி கீழே விழுந்ததாக அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு காலில் அடிப்பட்டுள்ளதாக கூறி கட்டு போட்டு அனுப்பி உள்ளனர். பின்னர் மீண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் ரண ஜன்னியால் பாதிக்கப்பட்டு குழந்தை பிரசாந்த் உயிரிழந்தது.

அதனால் மருத்துவர்கள் தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக குழந்தையின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி வட்டாட்சியர் கோகுல், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்ய கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News