தமிழ்நாடு செய்திகள்

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள்- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Published On 2025-03-21 09:02 IST   |   Update On 2025-03-21 09:02:00 IST
  • சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சென்னை:

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள போக்குவரத்துக்கு கழகங்கள் என 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 25 மண்டலங்களில் 3 ஆயிரத்து 274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள விழுப்புரம் மண்டலத்தில் 88 பணியிடங்கள், வேலூர் மண்டலத்தில் 50, காஞ்சீபுரம் மண்டலத்தில் 106, கடலூர் மண்டலத்தில் 41, திருவண்ணாமலை மண்டலத்தில் 37 இடங்கள் என மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதே போன்று, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் கும்பகோணம் மண்டலத்தில் 101 பணியிடங்கள், நாகப்பட்டினம் மண்டலத்தில் 136, திருச்சி மண்டலத்தில் 176, காரைக்குடி மண்டலத்தில் 185, புதுக்கோட்டை மண்டலத்தில் 110, கரூர் மண்டலத்தில் 48 என மொத்தம் 756 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேலும், சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள சேலம் மண்டலத்தில் 382 இடங்கள், தர்மபுரி மண்டலத்தில் 104 என மொத்தம் 486 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள கோவை மண்டலத்தில் 100, ஈரோடு மண்டலத்தில் 119, ஊட்டி மண்டலத்தில் 67, திருப்பூர் மண்டலத்தில் 58 என மொத்தம் 344 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அதே போன்று, மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள மதுரை மண்டலத்தில் 190 பணியிடங்கள், திண்டுக்கல் மண்டலத்தில் 60, விருதுநகர் மண்டலத்தில் 72 என மொத்தம் 322 பணியிடங்களும், நெல்லை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள நெல்லை மண்டலத்தில் 139, நாகர்கோவில் மண்டலத்தில் 129, தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

8 கோட்ட போக்குவரத்துக் கழகத்திலும் சேர்த்து நிரப்பப்பட இருக்கும் 3 ஆயிரத்து 274 டிரைவர்- கண்டக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக 21-ந்தேதி (இன்று) மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட மேலும் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மேலும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு குறித்த விவரங்கள் அவ்வப்போது விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News