வங்கியில் கடன் பெற்று தருவதாக மேலும் 2 பெண்களிடம் பணம் மோசடி
- நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள்.
- நிஷாந்தி செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகை மோசடி புகார்களை சட்டம்-ஒழுங்கு போலீசாரே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மோசடி புகார்களை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வங்கியில் கடன் பெற்று தருவதாக மேலும் 2 பெண்களிடம் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கிருமாம்பாக்கம் அருகே மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ஞானசவுந்தரி (வயது30). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் செல்போனில் மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கியில் இருந்து பெர்சனல் லோன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பிறகு குறிப்பிடப்பட்ட செல்போன் நம்பரில் ஞானசவுந்தரி தொடர்பு கொண்டபோது அதில் பேசிய தீபா என்ற பெண் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு ரூ.5 ஆயிரத்து 750 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன்படி ஞானசவுந்தரி அந்த பணத்தை கூகுல் பே மூலம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தும்படி கூறியதின் பேரில் ஞானசவுந்தரி ரூ.16 ஆயிரத்து 500, ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 77 ஆயிரத்து 750 அனுப்பி வைத்தார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து பணம் செலுத்தும்படி தொந்தரவு செய்து வந்தனர்.
இதனால் ஞானசவுந்தரி தனக்கு லோன் வேண்டாம் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்கும்படி கூறியபோது அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யபட்டதை அறிந்த ஞானசவுந்தரி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
பாகூர் காலனி தேசமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி நிஷாந்தி. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் செல்போனில் பிரதமரின் திட்டத்தில் ஒரு சதவீத வட்டியில் 20 சதவீத மானியத்தில் பணம் கடன் வழங்குவதாக மெசேஜ் வந்தது.
இதையடுத்து நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள். நிதி நிறுவனத்தில் கடன் பெற வேண்டுமானால் முதலில் ரூ.5 ஆயிரத்து 850-ஐ செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
அன்படி நிஷாந்தி தனது வங்கி கணக்கில் இருந்து குகூல் பே மூலம் செலுத்தினார். மீண்டும் மறுமாதம் ரூ.28 ஆயிரத்து 288 செலுத்துமாறு கூறியதால் அந்த பணத்தையும் நிஷாந்தி அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு நிஷாந்தியிடம் தொடர்புகொண்ட அவர்கள் தாங்கள் செலுத்திய பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என்று உறுதி கூறியதின் அடிப்படையில் பல கட்டமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 300-ஐ நிஷாந்தி அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு நிஷாந்தி அந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த நிஷாந்தி இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.