தமிழ்நாடு செய்திகள்

பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம்- சிறுவன் உள்பட 5 பேரிடம் விசாரணை

Published On 2022-08-24 11:09 IST   |   Update On 2022-08-24 11:09:00 IST
  • மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென பெண்ணை தாக்கினர்.
  • தலைமறைவாக உள்ள பிரபாகரன், விஜயன் ஆகிய 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண், நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு செல்வதற்காக பாலவநத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் பஸ் வரவில்லை.

அப்போது அந்த பெண்ணுக்கு அறிமுகமான கரிசல்குளத்தை சேர்ந்த ஒருவர் காரில் அந்த வழியாக வந்துள்ளார். அவர் அந்த பெண்ணிடம் வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி, காரில் ஏற்றி சென்றுள்ளார். பாலவநத்தம்-கோபாலபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி 2 பேரும் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த பெண்ணை தாக்கினர். இதை தடுக்க வந்த அந்த பெண்ணுடன் வந்த நபரை சரமாரியாக அந்த கும்பல் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதை தொடர்ந்து அந்த பெண்ணை கும்பல் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்தி சென்றனர். மறைவான இடத்திற்கு சென்ற அந்த கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த பெண் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு டாக்டர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அந்த பெண் அழுதுள்ளார். உடனே இதுகுறித்த தகவல் அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டது தெரியவந்தது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 50), ராம்குமார் (25), ஜெயகுமார், அழகுமுருகன்(19), போராளி என்ற பிரபாகரன், விஜயன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 7 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரன், விஜயனை தவிர மற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற பெண்ணை கடத்தி நகை பறிக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பிரபாகரன், விஜயன் ஆகிய 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News