தமிழ்நாடு செய்திகள்

பஸ்சை வழிமறித்து நின்ற யானை

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள் கூட்டம்

Published On 2023-06-09 12:38 IST   |   Update On 2023-06-09 12:38:00 IST
  • இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.
  • யானைகள் கூட்டத்தை பார்த்ததும் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார்.

மேட்டுப்பாளையம்:

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு 3-வது வழிப்பாதையாக வெள்ளியங்காடு-மஞ்சூர் பாதை உள்ளது.

இந்த பாதை வழியாக மஞ்சூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர நீலகிரிக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் இந்த சாலையிலும் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி சாலைகளில் காட்டு யானை, காட்டு பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பஸ் வெள்ளியங்காடு அருகே வந்தபோது, வனத்தைவிட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் நடுரோட்டிற்கு வந்தன. அங்கு வந்ததும், அரசு பஸ்சை காட்டு யானைகள் கூட்டம் மறித்தது.

யானைகள் கூட்டத்தை பார்த்ததும் பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டார். மேலும் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். ஆனால் யானை அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பஸ் டிரைவரும், பயணிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கினர். அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து பஸ் டிரைவரும், பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன் பின்னர் பஸ்சை பஸ் டிரைவர் வேகமாக இயக்கி சென்றார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News